காசா-எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்: 7 மாதம் போர் நீடிக்கும் என கொக்கரிப்பு
டெல் அலிவ்: இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்து பாலஸ்தீனத்தை விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றான ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டு இருக்கிறது. இந்த அமைப்பு கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது 200 நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75 சதவீதம் பேர் குழந்தைகள். இத்தகவலை பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இதுநாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டது. போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் உயிரிழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காசா-எகிப்து எல்லையான ரபாவின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. ரபா பகுதியில் 14 கி.மீ நீளத்திற்கு எல்லை விரிவடைந்திருக்கிறது. இது பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படுகிறது. இதனை கடந்தால் எகிப்து சென்று விடலாம். அங்கு அகதியாக சென்றால் கூட உயிர் பிழைத்திருக்க முடியும். எனவே, பாலஸ்தீனர்கள் எகிப்து நோக்கி செல்ல முயன்று வருகின்றனர். இப்படி இருக்கையில் இஸ்ரேல் ராணுவம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி எல்லையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் நிவாரண பொருட்களும் காசாவுக்குள் வருவதில் பெரும் சிக்கல் ஏற்படும். மறுபுறம் இஸ்ரேல், போரை நீடிப்பதாக அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறுகையில், ‘நாங்கள் இப்போது 2024ம் ஆண்டின் 5வது மாதத்தில் இருக்கிறோம். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்தின் ராணுவத்தையும், அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும்’ என்றார். இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவே, ரபா தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா கூட இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இருப்பினும் போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.